Sunday, February 18, 2007

கேள்வி மன்றம்

உரைநடைத் தமிழ் இலக்கணம் குறித்த உங்கள் ஐயங்களை இங்கு கேளுங்கள். இங்கோ, தேவைப்படின் தனி இடுகைகளிலோ உங்கள் ஐயங்களுக்கு கூட்டு முயற்சியில் விடை காண முயல்வோம்.

அன்புடன்,
ரவிசங்கர்

13 comments:

து. சாரங்கன் / Saru said...

வணக்கம். நல்ல முயற்சி. இதோ முதல் கேள்வி.

இது எனது நீண்ட நாள் சந்தேகம். தமிழில் சில வார்த்தைகள் ஒன்றன்பின் வருகையில் அவை வேறுவிதமாக எழுதப்படுகின்றன.

உதராணம்:
எழுத்துப்பிழைகள் (அல்லது) எழுத்து பிழைகள்
வேலைப்பளு (அ) வேலை பளு

இவற்றில் எது சரி? எது தவறு? இவ்வாறு எழுதுவதற்கான இலக்கணம் என்ன?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சாரங்கன், பாராட்டுக்கு நன்றி.

எழுத்து பிழைகள் / எழுத்துபிழைகள் - இப்படி ப் - ஐ விட்டு விட்டு சேர்த்து எழுதினாலும் பிரித்து எழுதினாலும் பிழை தான். இணையத்தில் பலரும் சந்திப் பிழைகளை கவனித்து எழுதுவதில்லை. அதனால் உங்களுக்கு இந்த தவறான புரிதல் வந்திருக்கிறது.

எழுத்துப் பிழைகள் / எழுத்துப்பிழைகள் - இரண்டும் தான் சரி. இரு சொற்களை சேர்த்து இடைவெளி இல்லாமல் குழப்பமாக இருக்கும் என்பதற்காக சொற்களை பிரித்து எழுதுகிறோம். அப்படி பிரித்து எழுதினாலும் க, ச, த, ப ஆகிய எழுத்துக்களுக்கு முன் பொருத்தமான இடங்களில் ஒற்று இட வேண்டும்.

இது குறித்து தனியாக இலக்கணமே உள்ளது. இவை குறித்து தேடிப் பார்த்து விரிவாக தனி இடுகையாகவே வழகாட்டுதலை தருகிறோம். என் எழுத்துக்களிலும் இந்தப் பிழை வரக்கூடும். இருந்தாலும், நாளும் இது குறித்து கற்றுக் கொண்டு வருகிறேன். நன்றி.

து. சாரங்கன் / Saru said...

பதிலுக்கு நன்றி. ஒரு சிறு சந்தேகம். க, ச, த, ப ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால்தான் அவற்றிற்குரிய மெய்யெழுத்துக்களையிட வேண்டுமா? வ, ஞ, ம ...என்று தொடங்கும் வார்த்தைகளுக்கு முன்னால்?

ஆஹா, அவற்றிக்குரிய (அ) அவற்றிற்குரிய (அ) அவைக்குரிய <- இவற்றில் எது சரி?

அதேபோல், வந்து இருக்கிறது / வந்திருக்கிறது இவை இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கின்றனவா? அப்படியிருப்பின் து+இ=தி என்று எப்படியானது?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சாரங்கன் - அவற்றிற்குரிய, அவைக்குரிய, அவற்றுக்குரிய - அனைத்தும் சரி.

அவற்றிக்குரிய - பிழை.

வந்து இருக்கிறது, வந்திருக்கிறது - இரண்டுமே ஒரே பொருள் தான். து+இ=தி ஆகும் என்பது புணர்ச்சி விதி. தமிழில் புணர்ச்சி விதிகள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. முறையாகப் பயிலவும் வேண்டியவை. தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் இலக்கணப் பாடத்தில் இவை தெளிவாக சொல்லித் தரப்படுகின்றன. இந்நப் புத்தக்கங்களை நீங்கள் பெற்றுக் கொள்ள இயலுமானால் நல்ல வழிகாட்டியாக இருக்கும். இல்லை, தேர்ந்த எழுத்தாளர்களின் இலக்கியங்களை தொடர்ந்து படித்தால் உங்களை அறியாமலேயே இந்த புணர்ச்சி விதிகள் உங்கள் மனதில் பதிந்து விடும்.

தற்போதைக்கு - தமிழ் விக்கிபீடியா இலக்கண வழிகாட்டல் பக்கத்தில் உள்ள இணைப்புகளை பின்தொடர்ந்து பாருங்கள். இயன்ற அளவு புணர்ச்சி விதிகள் குறித்து இந்த வலைப்பதிவில் விரிவாக எழுத முயல்கிறோம்.

அந்நாடு, இவ்வழக்கு என்று க, ச, த, ப ஆகிய எழுத்துக்களை தவிர்த்த பிற எழுத்துக்களுக்கு முன்னும் ஒற்றெழுத்துக்கள் வரும். ஆனால், இவற்றுக்கு சிறப்பாக இலக்கணம் அறியத் தேவை இல்லை. குழப்பமும் இராது. சொற்கள் புணரும்போது இந்த ஒற்று மிகல் மிகத் தெளிவாக வந்துவிடும். க, ச, த, ப ஆகியவற்றுக்கு தான் சிறப்பு விதிகள் உள்ளன.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

க, ச, த, ப மிகும் இடங்கள், மிகா இடங்களை பற்றி அறிய பின் வரும் சுட்டிகளைப் பார்க்கவும்.

http://www.pudhucherry.com/pages/gram2.html

http://www.pudhucherry.com/pages/gram3.html

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

தங்களின் சேவைக்கு பாராட்டுக்கள் ரவி...

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சிறில், நிலவு நண்பன் - ஊக்கத்துக்கு நன்றி. இன்னும் பலர் இணைந்து கலந்துரையாடும் களமாக இதை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்

நிலா said...

1.'இதுதான்' 'அதுதான்' - போன்றவற்றில் வரும் 'தான்' பிரிந்திருக்க வேண்டுமா சேர்ந்திருக்க வேண்டுமா?

எ.கா: சென்னையில்தான் - சென்னையில் தான் -- எது சரி? பெரும்பாலோர் பிரித்தே எழுதுகிறார்கள். எனக்கு முன்னதுதான் சரியாகப் படுகிறது... சான்றுடன் விளக்குவீர்களா?

2. கேள்விக்குறி வாக்கியத்தின் நடுவில் வரக்கூடாதெனப் படித்த நினைவு. ஆங்கிலத்திலும் அப்படிப் பயன்படுத்துவதில்லை. ஆனால் சில பெரிய தமிழ் எழுத்தாளர்கள் பயன்படுத்தியிருப்பதைக் கண்டிருக்கிறேன்

எ.கா: அவன் யார்? என்று கேட்டாள்.
இது சரியா தவறா?

உதவிக்கு நன்றி

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நிலா -

1. இரண்டு சொற்களை பிரித்து எழுதினால் பொருள் குறைபடும் / மாறும் என்றால் சேர்த்து எழுத வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கடல் படை என்று எழுதுவது பிழை. கடற்படை என்று எழுதுவது சரி. வீட்டு காவல் - பிழை. வீட்டுக் காவல் சரி. இந்த வகையில் தான் என்ற சொல்லை பிரித்து எழுதுவது நிச்சயமாக தப்பாக இருக்க வாய்ப்பில்லை. எனவே பிரித்தே எழுதலாம். பலரும் இப்படி எழுதப் பார்த்திருக்கிறேன். பொதுவாக தமிழில் நாம் அவசியமின்றி தனித்தனிச் சொற்களை சேர்த்து எழுதுவதில்லை. அந்த வகையில் அவன்தான் என்று எழுதுவது அவசியமற்றது.

2. என் பள்ளி தமிழ் அம்மாவைக் கேட்டால் வாக்கியத்தின் நடுவே கேள்விக்குறி, ஆச்சர்யக்குறி போன்றவை வரக்கூடாது என்பார்கள். அது தான் சரி. உரையாக மேற்கோள் குறியிடும்போது வேண்டுமானால் இக்குறிகள் வரலாம் என நினைக்கிறேன்.

எடுத்துக்காட்டுக்கு -

அவன் யார்? என்று கேட்டாள் - பிழை.

"அவன் யார்?" என்று கேட்டாள் - சரி.

மேற்கோள் குறி இல்லாமல் பெரிய எழுத்தாளர்கள் கேள்விக் குறி இடுவது குறித்து நான் சொல்ல ஒன்றுமில்லை !!

து. சாரங்கன் / Saru said...

சூப்பர் ரவிண்ணா. தமிழுக்கு சாதாரண சொல்திருத்தியைவிட இலக்கண விதிகளை அறிந்த சொல்திருத்தியே சரிப்பட்டு வருமென்று யாருடைய பதிவிலோ படித்ததாக ஞாபகம் (உங்களுடைய பதிவாகக் கூட இருக்கலாம்).

பேசாம இந்த இலக்கணத்தையுல்லாம் ஒரு மென்பொருளாய் ஆக்கினால் என்ன? அப்படிச் செய்தால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கலாம் - சொல்திருத்தி மற்றும் இலக்கணத்திருத்தி.

நிலா said...

//அவன்தான் என்று எழுதுவது அவசியமற்றது.
//

எனக்கு இன்னும் சமாதானமாகவில்லை. இந்த இடத்தில் 'தான்' என்பதற்குத் தனியாக ஒரு பொருளில்லை அல்லவா? அதனைத் தனி வார்த்தயாக எப்படி எடுத்துக் கொள்வது?

எ.கா: அதனால் தான் செய்தேன். இதில் 'தான்' என்பதற்குப் பொருளென்ன?
அவனுக்குத் தான், தன் குடும்பம் என்கிற எண்ணம் அதிகம்- இதில் தான் என்பதற்குப் பொருளுண்டு

எனக்குக் குழப்பம் நீடிக்கவே செய்கிறது.

உங்கள் விளக்கங்களை சான்றுகளோடு தந்தால் நன்றாக இருக்கும்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நிலா - முக்கியமான கேள்வியைத் தான் கேட்டிருக்கிறீர்கள். தனித்து எழுதினால் பொருள் கெடாமல் இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் தனித்து இருக்கையிலும் பொருள் தரத்தக்க சொற்களையே பிரித்து எழுத வேண்டும். பலர் எடுக்கப் பட்டது, தரப் பட்டது என்று பிரித்து எழுதுகிறார்கள். இது தவறு. இந்த வகையில் அவன் தான் என்பதை பார்க்கும்போது கொஞ்சம் குழப்புவது உண்மை தான் :(

தமிழ்நாட்டில் இலக்கணப் புத்தகங்களும் தமிழாசான்களும் பக்கத்தில் இருக்கும் யாராவது வந்து விளக்கம் சொன்னால் நன்று :)