Wednesday, March 7, 2007

உரைநடைத் தமிழில் அடிக்கடி காணப்படும் இலக்கணப் பிழைகள்

உரைநடைத் தமிழில் அடிக்கடி காணும் இலக்கணப் பிழைகள் சிலவற்றைக் கீழே தந்திருக்கிறேன்.

1. கற்ப்போம் - தவறு ; கற்போம் - சரி; ற் என்னும் எழுத்துக்கு அடுத்து இன்னொரு ஒற்றெழுத்து வராது.
2. அவனோ இல்லை இவனோ - தவறு ; அவனோ இவனோ - சரி.
3. அதுவும், இதுவும் - தவறு ; அதுவும் இதுவும் - சரி.
4. இந்தியாவும் மற்றும் சீனாவும் - தவறு; இந்தியாவும் சீனாவும் - சரி.

உங்களுக்குத் தெரிந்த சில பொதுவான இலக்கணப் பிழைகளையும் தெரியப்படுத்தினால் மேல் உள்ள பட்டியலை விரிவாக்கலாம். நன்றி.

அன்புடன்,
ரவிசங்கர்.

20 comments:

குமரன் (Kumaran) said...

உடனே நினைவிற்கு வருவது இடதுபக்கமும் vs. இடப்பக்கமும், வலதுபக்கமும் vs. வலப்பக்கமும்.

வசந்தன்(Vasanthan) said...

ரவிசங்கர்,
இது மிகமிக அவசியமான பணி. முயற்சிக்கு வாழ்த்து.
வலைப்பதிவுகளில் இடம்பெறும் இன்னொரு பிழை, பன்மை - ஒருமை வினைமுற்றுக்களைக் கவனியாமல் விடுவது. மேலோட்டமாக வலைப்பதிவுகள் சிலவற்றில் வந்த தவறுகளையும் அவ்விடுகைகளுக்கான சுட்டிகளையும் தந்திருக்கிறேன் (தொடர்புடைய வலைப்பதிவர்கள் கோபிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்).
எனது திருத்தம்கூட சிலவேளை தவறாக இருக்கக்கூடும். அப்படியிருந்தால் தெரியப்படுத்தவும்.

1. அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்பட்டது
http://sivabalanblog.blogspot.com/2006/08/50.html
அணிக்குக் கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்பட்டன

2. பதிவுகளை விட பின்னூட்டங்கள் சுவையாக சூடாக இருக்கிறது
http://madippakkam.blogspot.com/2006/08/blog-post_115588260395306326.html
பதிவுகளை விட பின்னூட்டங்கள் சுவையாக சூடாக இருக்கின்றன.

3. சமீபத்தில் தில்லை நிகழ்வுகள் நமக்கு தெளிவாகவே சொல்கிறது
http://madippakkam.blogspot.com/2006/08/blog-post_18.html
சமீபத்திய தில்லை நிகழ்வுகள் நமக்குத் தெளிவாகவே சொல்கின்றன.

4. அவர் இயக்கிய மூன்று படங்களுமே வசூலில் பெரும் சாதனை செய்தது தான்....
http://madippakkam.blogspot.com/2006/08/blog-post_10.html
அவர் இயக்கிய மூன்று படங்களுமே வசூலில் பெரும் சாதனை செய்தவைதாம்....

5. கேரள விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த கே. நந்தகுமார் தலைமையில் விவசாயிகள் குழுவொன்று கலைஞரின் புகைப்படத்தைத் தாங்கிக் கொண்டு, கோயிலை மூன்று முறை வலம் வந்து சிறப்புப் பூஜைகள் செய்தன.
http://madippakkam.blogspot.com/2006/08/blog-post_09.html
மேலே 'குழுவொன்று' என்று ஒருமை வந்தபடியால் 'சிறப்புப் பூஜைகள் செய்தது' என்றுதான் வசனம் முடியவேண்டும்.

6. நான் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து நான்கு மாதம் ஆகிறது.
http://kilumathur.blogspot.com/2006/08/blog-post_17.html
நான்கு மாதங்கள் ஆகின்றன. (காலத்தைக் குறிக்கும்போது பன்மை கட்டாயமில்லை என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்)

7. இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் இணையத்தளங்கள் பெரும்பாலும் புலிகளினால் தடைசெய்யப்பட்ட, ஏனைய தமிழ் இயக்கங்களினதும், அல்லது புலி அரசியலுக்கு எதிரான கருத்துக் கொண்டவர்களினாலும் நடாத்தப்படுகின்றது.
http://nasamaruppaan.blogspot.com/2006/08/blog-post_27.html
"நடத்தப்படுகின்றன" என்று வந்திருக்க வேண்டும்.

கேதீஸ_க்கு ஈழத்தமிழர் தொடர்பான பிரச்சினையில் நிறையவே பங்கிருக்கின்றன.

"பங்கிருக்கிறது" என்று வந்திருக்க வேண்டும்.
________________________________
இவை தற்செயலாகத் தென்பட்ட மாதிரிகள். இதேவகைப் பிழைகள் ஏராளமாக தமிழ் வலைப்பதிவுகளில் காணலாம். இதைச் சொல்லும் எனது பதிவிலேயே தவறுகள் இருக்கும். ஆனால் திருத்தப்பட வேண்டியவை.

Deepa said...

அடேங்கப்பா..அப்போ என்னோட பதிவுக்கு பாஸ்-மார்க் கூட கிடைக்காது ..

உங்களுக்கு பிழைகள் பட்டியல் என்னோட பதிவுகளில் தாரளமாக கிடைக்கும்...கூச்சப்படாம உங்க பட்டியலில் சேர்த்துக்கோங்க..

அட அவ்வளவு ஏன்..இந்த பின்னூடத்திலெயே..எக்கச்சக்க பிழையிருப்பதை கவநிச்சிருப்பீங்க..:D)..

நான் முறையாக தமிழில் எழுத கற்றுக்கொண்டதில்லை.
தீபா

Kanags said...

மேலும் சில:

முன்னூறு - தவறு, முந்நூறு - சரி.

வென்னீர் - தவறு, வெந்நீர் - சரி

வல்லுனர் - தவறு, வல்லுநர் - சரி

சிகப்பு - தவறு, சிவப்பு - சரி

நாகரீகம் - தவறு, நாகரிகம் - சரி

உடமை - பிழை, உடைமை - சரி

எண்ணை - பிழை, எண்ணெய் - சரி

கருத்துக்கள் - பிழை, கருத்துகள் - சரி

தெய்வீகம் - தவறு, தெய்விகம் - சரி

பத்திரிக்கை - தவறு, பத்திரிகை - சரி

சாத்தான் said...

இரண்டே இரண்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறேன் - "சிலவற்றை கீழே" என்று எழுதியிருக்கிறீர்கள். "சிலவற்றைக் கீழே" என்பதே சரி.

ஒற்றெழுத்து என ஒன்று உண்டா? ஒற்று என்பதே போதுமானது என்று நினைக்கிறேன். தமிழில் அதிகமாக வருபவை ஒருமை-பன்மைப் பிழைகள்தாம் என்று நினைக்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி சங்கர்!
எனக்குதவும் பதிவு!
நன்றி

ரவிசங்கர் said...

குமரன், வசந்தன், கனக்ஸ் - எடுத்துக்காட்டுக்களுக்கு நன்றி. இதையும் பதிவில் சேர்த்து விடுகிறேன்.

யோஹன், தீபா - உங்களுக்கு பதிவு பயனுள்ளதாக இருப்பது குறித்து மகிழ்ச்சி.

சாத்தான் - என் பிழைகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்துகிறேன். எனக்கும் குழும உறுப்பினர்களுக்கும் அனைத்து இலக்கண விதிகளும் தெரியும் என்றோ பிழையின்று எழுதுவோம் என்றோ உறுதி அளிக்க முடியாது. உங்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ளவும் எல்லாரும் கூடி விவாதிக்கவும் இந்த பதிவு ஒரு களமாக இருத்தலே எங்கள் நோக்கம். நன்றி.

ஞானவெட்டியான் said...

நன்று! நன்று!
கற்போம்! கற்பிப்போம்!!

கோபி(Gopi) said...

ரவி,

என் பங்குக்கு:

"அவைகளை அங்கே வை" - தவறு
"அவற்றை அங்கே வை" - சரி

"அவைகள் ஓட்டம் பிடித்தன" - தவறு
"அவை ஓட்டம் பிடித்தன" - சரி

"இது குறித்து மேலவை, கீழவை ஆகிய அவைகளில் விவாதிக்கப்பட்டது" - சரி

மாதங்கி said...

1. புழக்கடை - தவறு
புழைக்கடை என்பதே சரி

2. கப் என்பதை தமிழில் கிண்ணம் எனலாம்.

குவளை என்பது mug

3. எனது மகன் - தவறு
எனது வீடு/புத்தகம் - சரி

4. -- மாநில முதல்வர் ஒரு நாள் பயணமாக சென்னைக்கு வந்தார்- தவறு


ஒரு நாள் பணியாக சென்னைக்கு வந்தார் - சரி

5. வருகை புரிந்தார் - தவறு

வந்தார்- சரி

6. பேச்சுவார்த்தை நடத்தினார்
- தவறு

பேசினார் - சரி

7.சுத்தீகரிக்கப்பட்டது - தவறு

சுத்தம் செய்யப்பட்டது - சரி

8. மருமகள்கள் - தவறு

மருமகளிர்- சரி

9. மாங்காய்மடையர் - தவறு

மாமடையர் - சரி

ரவிசங்கர் said...

கோபி - நன்றி.

மாதங்கி - எடுத்துக்காட்டுக்களுக்கு நன்றி. சில ஐயங்கள்:

1. பயணமாக வந்தார் என்று சொல்வது ஏன் தவறு?

2. வருகை புரிந்தார் என்பதை தவறு / தேவையற்ற சுற்றி வளைப்பு என்று புரிந்து கொண்டாலும், dicussion, talks என்ற சொற்களுக்கு இணையாக பேச்சுவார்த்தை என்ற சொல் பெரிதும் உதவுகிறதே. வெறுமனே பேசினார்கள் என்றால் held talks என்பதற்கு இணையான பொருள் குறைவது போல் இருக்கிறதே??

3. எனக்கு இரண்டு மகள்கள் என்று சொல்வதும் தவறா?

4. மாங்காய்மடையர் குறித்த உங்கள் விளக்கம் சுவையானது. இது வரை இப்படி நினைத்துப் பார்த்தது இல்லை. தேங்காய் மடையன் போன்று இன்ன பிற சொற்களை உருவாக்க மாங்காய் மடையன் உதவுகிறது :)

மாதங்கி said...

1. -- மாநில முதல்வர் ஒரு நாள் பயணமாக சென்னைக்கு வந்தார்- தவறு


ஒரு நாள் பணியாக சென்னைக்கு வந்தார் - சரி

ஒரு நாள் பயணமாக - ஒரு நாள் முழுவதும் பயணம் செய்து வந்தார் என்று பொருள் தரும்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு:

கோஃபி அன்னான் தமது பயணத்தை
ஒருநாள் நீட்டித்தார்.

கோஃபி அன்னான் தாம் பயணம் செய்வதை நீட்டித்தாரா? அங்குத் தங்கிய காலத்தை நீட்டித்தாரா?

2. பேச்சுவார்த்தை நடத்தினார்- பேசினார்

பேசினார் என்பதே சரி.

அ. கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டார்கள்- இதுகூட சரியில்லை

கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள்- சரி

ஆ.' துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்'


இதனைத் ' துப்பாக்கியால் சுட்டார்கள் என்பதே போதும். சுட்டார்கள் என்னும் வினை முற்றைச் சூடு எனப் பெயராக்கிப் பிறகு அதற்கு நடத்தினார்கள் என்னும் மற்றொரு வினைமுற்றின் துணையை நாடத் தேவையில்லை.

இ. 'உறுதிமொழி எடுத்துக் கொள்கிறன்'- தவறு

இதை உறுதி மொழிகிறேன். உறுதி மொழி கூறுகிறேன்; உறுதியேற்கிறேன் என்பன போலச் சொல்வது சரியாக இருக்கும்.

ஈ. மம்மி எனக்கும் இளவரசி ஆகணும்
- தவறு
எனக்கும் பந்து வேணும்- சரி
நானும் இளவரசி ஆகணும்-சரி

உ.ஆசிரியர்& வெளியிடுபவர் அ. ஆஆஆஅ

ஆசிரியரும் வெளியிடுபவரும் அ. ஆஆஆஅ என்று எழுதவேண்டும்.

நிறுத்தக் குறிகளை ஏற்றுக் கொண்ட தமிழ் இது போன்றவற்றையும் ஏற்றுக் கொள்ளக் கூடாதா என்றால் முற்றுப் புள்ளி, வினாக் குறி போன்ற குறிகளை நாம் யாரும் ஒலிக்கத் தேவையில்லை.

'அவன் வந்தானா?' என்பதை யாரும்
'அவன் வந்தானா வினாக்குறி' என்று சொல்லவேண்டியதில்லை.

ஆசிரியர் & வெளியிடுபவர் என்னும்போது ஆசிரியர் அண்ட் வெளியிடுபவர் என்று சொல்லாமல் இருக்க முடியாதே.

இந்த விளக்கங்களை பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் தன் புத்தகத்தில் கூறியுள்ளார்.

3. மகள்கள் சரியா- நல்ல கேள்வி.

மருமகள்கள் -தவறு
மருமகளிர் - சரி

பாரியின் பெண்களை பாரி மகளிர் என்று சொல்கிறோம்.

இப்போது 'பேச்சு வழக்கில்' எனக்கு இரண்டு மகளிர் இருக்கிறார்கள் என்று
யாரும் சொல்லி நான் கேட்டதில்லை.

ஆனால் பேருந்துகளில் 'மகளிர் '
என்று எழுதப்பட்டிருப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.

ரவிசங்கர் said...

மாதங்கி - மிகவும் அருமையான எடுத்துக்காட்டுக்கள். அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.

வினையைப் பெயராக்கி அப்புறம் அந்தப் பெயர்ச் சொல்லுக்கு இன்னொரு துணை வினைச்சொல் கொண்டு சுற்றி வளைத்து வினையைச் சுட்டும் பிழையை நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ செய்கிறோம். ஆங்கில மயமாக்கப்பட்ட மொழிச் சிந்தனையின் விளைவாகவும் இதை கருதலாம்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு - முயற்சிக்கிறேன், முயற்சி செய்கிறேன் - என்று பிழையாக சொல்வது. முயல்கிறேன் என்று சொல்வது தான் சரி. முயல் என்ற வினையடி பிறந்தது முயற்சி என்னும் பெயர்ச்சொல்.

பேருந்துகளில் மகளிர் என்று பார்த்து இருக்கிறேன் தான். ஆனால், இது தான் சரியான பன்மை வடிவம் என்பது நான் அறியாதது. சுட்டிக் காட்டியதற்கு நன்றி. ள் ஈற்றில் வரும் சொற்களுக்கான பன்மை விதியாக இதைக் கொள்ளலாமா?

ரவிசங்கர் said...

பேருந்துகளில் மகளிர் என்னும் சொல் இருப்பது தவிர, அரசியல் கட்சிகளில் மகளிர் அணி மிகப் பிரபலம். இருந்தாலும், இந்த சொற்களுக்குப் பின் உள்ள இலக்கணத்தை நினைத்துப் பார்க்க மறந்து விடுகிறோம்.

கோபி(Gopi) said...

இன்னும் சில பிழைகள் 'பண்ணி' தமிழால் வருவது (காலையில எழுந்து ப்ரஷ் 'பண்ணி', உக்கார்ந்து கம்பியூட்டரை ஆன் 'பண்ணி', சாட் 'பண்ணி' - இந்தத் தமிழை எங்கள் நண்பர் வட்டாரத்தில் 'பண்ணித் தமிழ்' என்போம்.)

'பண்ணி'த் தமிழால் தமிழுக்கு வந்த ஒன்று:
(Thanks)நன்றிகள் - தவறு, நன்றி - சரி

ரவிசங்கர் said...

மாதங்கியின் மறுமொழியில் இருந்து -
ரவிசங்கர், 'ள் ஈற்றில் வரும் சொற்களுக்கான பன்மை விதியாக இதைக் கொள்ளலாமா?'

என்று கேட்டிருக்கிறீர்கள்;

பார்ப்போம்.

பன்மை ஈறுகள் - அர், ஆர், கள், ர், மார், வை.

அரசன்- அரசர், குரு- குருமார்/குருமார்கள், கிளை-கிளைகள், வேர்- வேர்கள், அவன், அவர், அது- அவை

மார் என்னும் பலர்பால் ஈறுடன் 'கள்'
விகுதியும் சேர்வதுண்டு

தம்பி- தம்பிமார்-தம்பிமார்கள்,
துரை-துரைமார்-துரைமார்கள்

அன், அள் ஈற்று ஒருமை விகுதிகள் ர்+கள் என முடியும்
அவன், அவள், அவர்கள்; இவன்,இவள், இவர்கள்.

அன், அள் ஈற்றுச் சிறப்பு ஒருமை அர் என்று முடியும். அவன், அவள், அவர்; இவன், இவள், இவர்.

மரியாதையைக் குறிக்க ஆர் ஒருமையில் வரும்.

ஔவையார், தாயார், தந்தையார்.

முற்காலத் தமிழர் பெயருக்குப் பின் ஆர் என்ற விகுதியைச் சேர்த்தனர்.

முருகனார், பாரதியார், பிசிராந்தையார்.ஒருமை - பன்மை

மகள் - மகளிர்

பொருள்- பொருளிர் என்று கூறுவதில்லை , பொருள்கள் என்றே
கூறுகிறோம்.

நாள் - நாளிர்
செய்யுள் - செய்யுளிர்
என்று கூறுவதில்லையே


கேள்- கேளிர் (உறவினர்)
மகள்-மகளிர் என்பதைப் போல்
ளகரம் ஈற்றில் வரும் எல்லாச் சொற்களும் பன்மை விகுதியாக அர் வர முடியாது.

எம்.கே.வான்மதி said...

தங்களது அருமையான முயற்சிக்கு எனது பாராட்டுகள்!
தொடர்ந்து எழுதுங்கள்.


வாழ்த்துக்கள் என்று எழுதுவது தவறு வாழ்த்துகள் என்பதே சரி.

மக்கள் தொலைக்காட்சியில் பேராசிரியர் நன்னன் அவர்களின் களத்துமேடு நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதுபோல உங்கள் பதிவும் மிகவும் நன்று.

எனது கேள்விகள் சில:

1. அது போல, அதைப் போல இதில் எது சரி?

2. மெடிக்கல் ‡ மருந்தகம், கம்ப்யூட்டர் சென்டர் ‡ கணினி பயிற்சி மையம் ;
மேற்கண்டவை போல ஆங்கிலத்தில் எழுதப்படும் நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில்
கொடுத்தால் பயனுறுவேன்.

நன்றி

Kumaran Ramayah said...

அன்புசால் சகோதரர் இரவிசங்கர்,
உங்களுடைய முயற்சி பராட்டுதற்குரியது. உங்களுக்கு எனது வாழ்த்துகள். தொடர்க முயற்சியை...

குழந்தை - எந்த பால் பகுப்பில் சேர்ப்பது?

Sivakumar said...

""அதுவும், இதுவும் "" இதுக்கு 100 மதிப்பெண்
தமிழ்ல இலக்கணப்படியெழுதினா comma(,) தேவையில்ல

Murugesan said...

இலக்கணம் சில சந்தேகங்களை தெளிவாக்கியுள்ளது.

ஒரு சந்தேகம்
நாட்கள் அல்லது நாள்கள் எது சரி காரணம்
பொருள்கள் அல்லது பொருட்கள் எது சரி
பதில் வேண்டுகிறேன்

முருகேசன்

mspmurugesan@gmail.com