பதற்றத்தில் வரும் தவறு
எல்லையில் பதற்றம் சரி, எல்லையில் பதட்டம் தவறு.
பதறுதல்,பதறினான், பதறிப் போனாள்.
பதட்டம் பொருளற்றது. பத்திரிகைகள் பல இப்போதும் பதட்டம் என்றே எழுதி வருகின்றன.
ஊருக்குள் கலவரம் வெடித்தது; பதட்டம் நீடிப்பு என்பது தவறு
ஊருக்குள் கலவரம் வெடித்தது; பதற்றம் நீடிப்பு என்றே எழுத வேண்டும்.
*
கலவரத்தில் பலி 30 ஆக உயர்வு
விபத்தில் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்வு
இது நாம் செய்தித்தாள்களில் அன்றாடம் காணும் செய்தி.
எண்ணிக்கை என்பது என்ன? அது எப்படி உயரும்?
அது என்ன நீட்டல் அளவா உயர்வதற்கு? எண்ணிக்கை கூட வேண்டுமே தவிர உயரக்கூடாது.
கலவரத்தில் பலி 30 ஆக கூடியது
விபத்தில் சாவு எண்ணிக்கை 12 ஆக கூடிவிட்டது.
*
என்னைப் பொறுத்தவரை, இந்த கருத்தைப் பொறுத்தவரை என்று இப்போது "பொறுத்தவரை" என்ற சொல்லைப் பயன்படுத்து கிறோம். இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப் படவில்லை.
as far as india is concerned என்பது போன்ற ஆங்கிலப் பதத்துக்கு பெயர்ப்பாக இது உருவாகி இருக்கலாம்.
இதன் பொருள் பொறுப்பு என்ற பதத்திலிருந்து வருகிறது. எனவே பொறுத்தவரை என்பது சரி. சிலர் இதை பொருத்தவரை என்று பயன்படுத்துகின்றனர். இது பொருட்பிழை தரும்.